கர்நாடக தேர்தலில் முதல்வர் பசவராஜ்க்காக பிரசாரம்... நடிகர் சுதீப் தகவல்

பெங்களூரு: கர்நாடக தேர்தலில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்காக பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக நடிகர் சுதீப் அறிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 10ம் தேதி நடக்கிறது. ஆனால் இதுவரை கன்னட திரையுலகம் கர்நாடக அரசியலில் பெரிய அளவில் தலையிடவில்லை. மேலும் அவர்கள் அரசியல் சூழ்நிலைகள், விவாதங்கள், பிரச்சாரங்கள் போன்றவற்றில் ஈடுபடுவதில்லை. கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார்கள் என்று அழைக்கப்பட்ட மறைந்த ராஜ்குமார், விஷ்ணுவர்தன், புனித் ராஜ்குமார் ஆகியோர் தங்கள் ரசிகர் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியலில் ஈடுபடவே இல்லை.

மறைந்த நடிகர் அம்பரீஷ், ஆனந்த் நாக், பிசி பாட்டீல் உள்ளிட்ட பலர் கன்னட திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள். நடிகை ரம்யா, சுமலதா எம்.பி., திரைப்பட தயாரிப்பாளர் குமாரசாமி உள்ளிட்டோர் சமீபகாலமாக திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளனர். சுமலதா எம்.பி., நடிகர்கள் தர்ஷன் மற்றும் யாஷ் சுயேட்சையாக போட்டியிட்டபோது அவருக்காக பிரச்சாரம் செய்தனர்.

கடந்த தேர்தலின்போது நடிகர் சுதீப் பா.ஜனதா மந்திரி ஸ்ரீராமுலுவுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டார். அதுபோல் நடைபெற உள்ள தேர்தலிலும் அவர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்காக பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்.

அதேபோல் கன்னட நடிகர் சேத்தனும் அரசியல் மற்றும் அரசியல் தலைவர்களை விமர்சித்து வருகிறார். மேலும் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனும் நடிகருமான நிகில் வரும் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

நடிகைகள் உமாஸ்ரீ, மாளவிகா அவினாஷ், ஸ்ருதி, பாவனா, நடிகர்கள் ஜாகேஷ், நரேந்திர பாபு உள்ளிட்டோர் தற்போது அரசியல் களத்தில் உள்ளனர். இதன் மூலம் கன்னட திரையுலகின் பார்வை மீண்டும் அரசியலுக்கு வருவதை பார்க்க முடிகிறது.