கோப்ரா பட ப்ரோமோஷன் நிகழ்ச்சி... கூட்ட நெரிசலில் சிக்கி மாணவர்கள் மயக்கம்

மதுரை: கல்லூரி மாணவர்கள் மயக்கம்... மதுரையில் நடந்த 'கோப்ரா' பட புரமோஷனில் கூட்ட நெரிசலில் சிக்கி கல்லூரி மாணவர்கள் மயக்கம் அடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள 'கோப்ரா' திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி, மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம், நடிகைகள் மீனாட்சி, மிருனாளினி ரவி, ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

நடிகர் விக்ரம் வருகைக்காக ஏராளமான மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் ஆடல் ஆடியபடியும், பாடல் பாடியபடியும் காத்திருந்தனர். இதனையடுத்து கல்லூரிக்கு வருகை தந்த நடிகர் விக்ரம் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மத்தியில் கடும் நெரிசலில் சிக்கியபடி வருகை தந்தார்.

இதனையடுத்து மேடைக்கு வந்தப்பின் நடிகைகள் திரைப்படம் குறித்து பேசியதை அடுத்து நடிகர் விக்ரம் பேசியபோது, 'மதுரைக்கு வந்தவுடன் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில், மீசைத் தானாகவே மேலே சென்றுவிட்டது.

நடிகர் துருவ் விக்ரம் அனைவருக்கும் ஐ லவ்யூ சொல்ல சொன்னார். மதுரை என்றாலே ரொம்ப பிடிக்கும். எனது அப்பா படித்தது அமெரிக்கன் கல்லூரி தான். நான் கல்லூரி படித்து கொண்டிருந்த போது மதுரைக்கு அடிக்கடி வருவேன். மதுரை என்றாலே நல்ல ருசியான உணவும், ஜாலியும் தான்.

'அந்நியன்' திரைப்படம் போன்று சண்டை, காதல், கிரைம் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யங்கள் உள்ள படம் 'கோப்ரா' எனவும், மதுரைக்காரர்களுக்கு சினிமா என்றாலே வெறி தான் போல் என்பதை நிருபிக்கும் வகையில் அவ்வளவு வரவேற்பு தருகிறார்கள்' இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் விக்ரம், உங்களுடைய பேவரிட் படம் எந்த படம் என்ற ரசிகரின் கேள்விக்கு பதிலளித்தபோது, தனது பேவரிட் 'கோப்ரா' தான் என்றார்.

இதனிடையே விழாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டனர். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மாணவர்களை கட்டுப்படுத்த தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால், கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி பல மாணவ, மாணவிகள் மயங்கி விழுந்தனர். இதில் முற்றிலும் சுயநினைவு இழந்த மாணவர் ஒருவரை, சக மாணவர்கள் தூக்கி கொண்டு சாலையில் ஓடினர்.

கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, ஆம்புலன்ஸ் வர வழி இல்லாத காரணத்தால், ஆட்டோ ஒன்றில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.