லியோ படத்தின் தயாரிப்பாளருக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் மனஸ்தாபம்?

சென்னை: லியோ படத்தை திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர் லலித் குமாரின் செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ நிறுவனம், 80 சதவீத பங்கீட்டு தொகையைக் கேட்டதாகக் கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் உலகம் முழுவதும் 6,000 திரைகளில் வெளியானது. இதுவரை வெளியான தமிழ்ப்படங்களிலேயே அதி வேகமான வசூல் லியோதான் என்கிற அளவிற்கு உலகம் முழுவதும் இப்படம் வருவாயை ஈட்டி வருகிறது.

இப்படம் 7 நாள்களில் ரூ.461 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவித்துள்ளது. இதற்கிடையில் திரையரங்க உரிமையாளர்கள் பக்கம் பிரச்னையும் எழுந்துள்ளது. காரணம், லியோ படத்தை திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர் லலித் குமாரின் செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ நிறுவனம், 80 சதவீத பங்கீட்டு தொகையைக் கேட்டதாகக் கூறப்படுகிறது.

வெளியீட்டு உரிமையைப் பெற்றவர்கள் வழக்கமாக, திரையரங்க உரிமையாளர்களிடம் 60 அல்லது 70 சதவீதத் தொகையே பங்கீட்டாகக் கொடுக்க ஒப்பந்தம் செய்வார்கள். ஆனால், தீபாவளி வரை வேறு எந்தப் படமும் போட்டிக்கு இல்லை என்பதால் லியோவுக்காக அதிக பங்கீட்டு தொகையைக் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்திருந்தார்.