குறும்படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகம் ஆகும் தயாநிதி அழகிரி

குறும்படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார் திமுக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி. இவர் திரைப்படத்துறையில் தயாரிப்பாளராக ஏற்கனவே வெற்றிகரமாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

'தமிழ்ப் படம்', 'தூங்காநகரம்', 'மங்காத்தா' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த நிறுவனம் க்ளவுட் நைன் மூவிஸ். இந்நிறுவனத்தை நடத்தி வருபவர் திமுக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி. சில வருடங்களாகவே தயாரிப்பிலிருந்து விலகியே இருந்தார்.

தற்போது இயக்குநராக அறிமுகமாகவுள்ளார் தயாநிதி அழகிரி. 'மாஸ்க்' என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். தொழில்நுட்பம் என்பது இருபக்கமும் கூர்மையுள்ள கத்தி போன்றது. அதைச் சரியாகக் கையாளாவிட்டால் பயன்படுத்துவோருக்கும் ஆபத்தைத் தரக்கூடியது.

கோவிட்-19 முடக்கக் காலகட்டத்தில் சமூக ஊடகங்கள் தனிப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து தொடர்பு கொள்ளப் பேருதவியாக இருந்தன. பலவகையிலும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு உதவியதை அறிவோம்.ஆனால் அதே நேரத்தில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கவும் வதந்திகளைப் பரப்பவும் இந்த ஊடகத்தைப் பயன்படுத்தியவர்களும் உண்டு. அப்படி ஒருவனைப் பற்றிய கதை தான் 'மாஸ்க்'.

இந்தக் குறும்படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலக பிரபலங்கள், தயாநிதி அழகிரிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.