கமலின் அடுத்த படங்களின் நிலையை பொறுத்து வேட்டையாடு விளையாடு -2 உருவாகுமாம்

சென்னை: கமல்ஹாசன் நடிக்க உள்ள அடுத்த படங்களின் நிலையை பொறுத்து வேட்டையாடு விளையாடு 2-ம் பாகம் உருவாகும்” என்று இயக்குனர் கௌதம்மேனன் விளக்கம் அளித்துள்ளார்.

கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் 2ம் பாகம் வெளியானது. தற்போது இந்தியன் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற விக்ரம் படத்தின் அடுத்த பாகமும் தயாராக இருக்கிறது.

இந்நிலையில் கமல்ஹாசன், ஜோதிகா, கமலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி ஆகியோர் நடிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகவுள்ளதாக கௌதம் மேனன் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் படப்பிடிப்பு தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

கமல்ஹாசன் மற்ற படங்களில் நடித்து வருகிறார். இதனால் வேட்டையாடு விளையாடு படத்தின் 2-ம் பாகத்தை கைவிட்டுவிட்டதாக தகவல் பரவியது. இதற்கு கவுதம் மேனன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்து கமல்ஹாசனிடம் பேசியுள்ளேன்.

கதை என்ன மாதிரி இருக்கும் என்பதையும் தெரிவித்து இருக்கிறேன். கமல்ஹாசன் நடிக்க உள்ள அடுத்த படங்களின் நிலையை பொறுத்து வேட்டையாடு விளையாடு 2-ம் பாகம் உருவாகும்” என்றார்.