கமல் படத்தை இயக்குகிறார் இயக்குனர் எச்.வினோத்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

சென்னை: கமலுடன் இணைந்துள்ளார் இயக்குனர் எச்.வினோத். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான கமல், தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து கமல், புராஜெக்ட் கே படத்தில் நடிக்கிறார். இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் கமலின் 233வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளனர். அதன்படி கமல்ஹாசனின் கேஎச்233 படத்தை 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'துணிவு' போன்ற படங்களை இயக்கிய எச். வினோத், இயக்கவுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கமலின் 234வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.