ஹாக்கி அகாடமி நிறுவ முன்னாள் ஹாக்கி அணி கேப்டன் ஆர்வம்!

அரியானாவில் போலீஸ் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வரும் இந்தியாவின் முன்னாள் ஹாக்கி அணி கேப்டன் சர்தார் சிங் செப்டம்பர் 2018 இல் ஓய்வு பெற்றார். இவர் ஹாக்கி அகாடமி ஒன்றை நிறுவ மிக ஆர்வமாக உள்ளார். மேலும் இந்தியாவுக்காக சர்வதேச நட்சத்திரங்களை உருவாக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து சர்தார் சிங் வீடியோ பேட்டி ஒன்றில் கூறியதாவது:- இந்த ஊரடங்கின் போது, ​​நான் எனது பெற்றோருடன் அதிக நேரம் செலவிட்டேன். இது எனக்கு ஒரு புதிய அனுபவம், ஏனெனில் கடந்த 15-20 ஆண்டுகளில், தேசிய அணியுடன் நிறைய பயணங்களில் கலந்து கொண்டேன் அதனால் என்னால் அதிக நேரம் குடும்பத்துடன் செலவிட முடியவில்லை.

இந்த காலகட்டத்தில், ஒரு தனிநபராகவும் அணியுடனான எனது சாதனைகளை நினைவுகூர முடிந்தது. இது எனக்கு பெருமை சேர்க்கிறது. ஒரு அகாடமி அமைப்பதற்கான திட்டங்களில் சில காலமாக ஈடுபட்டு வருகிறேன். பஞ்ச்குலாவில் எங்காவது ஒரு இடத்தை அரியானா அரசு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இவரது தலைமையில் தான் தங்கப்பதக்கம் வென்றது.