நான் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்

சென்னை: “என் சினிமா பயணம் வீணாகிவிடுமோ என பயந்தேன். அப்படி எதுவும் நடக்கவில்லை. தேசிய விருது அறிவிப்பை அறிந்து திக்குமுக்காடி போய் இருக்கிறேன் என்று நடிகை அபர்ணா பாலமுரளி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அறிவிக்கப்பட்ட 68ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் சூரரைப் போற்று படம் 5 விருதுகளை அள்ளியிருக்கிறது. இதுபோக சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் 3, மண்டேலா 2 என மொத்தம் தமிழுக்கு மட்டும் 10 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. இந்நிலையில், சூரரைப் போற்று படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்ற அபர்ணா பாலமுரளி அவரது திரைப்பயணம் குறித்து கூறியதாவது:

“என் சினிமா பயணம் வீணாகிவிடுமோ என பயந்தேன். அப்படி எதுவும் நடக்கவில்லை. தேசிய விருது அறிவிப்பை அறிந்து திக்குமுக்காடி போய் இருக்கிறேன். 'சூரரைப் போற்று' படத்தின் இயக்குநருக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். சுதா கொங்கரா எனக்கு பின்னால் உறுதியாக நின்றார். இந்தப் படம் வெளியாகும்போது, கரோனா காலமாக இருந்ததால் திரையரங்குகளில் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் எங்களுக்குள் இருந்தது.

ஆனால் இப்போது நான் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். எனது சினிமா பிரவேசம் எதிர்பாராதது. 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தில் எனக்கு கிடைத்த கதாபாத்திரத்தைப் போல நிறைய நல்ல படங்களில் தரமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அனைவருக்கும் மிக்க நன்றி. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் இந்த உலகத்தில் இல்லை.

நான் இந்தத் துறையில் நுழைந்தபோது எனக்கு எதுவும் தெரியாது. இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. வெளிப்படையாகச் சொன்னால், நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன். காலை வீட்டை விட்டு வெளியேறும்போதே சற்று பதற்றத்துடன் இருந்தேன். இயக்குநர் சுதா கொங்கரா என் மீது நம்பிக்கவைத்து இந்த கதாபாத்திரத்தை கொடுத்தார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.