அரசியலுக்கு வருவதற்கு எனக்கு எந்த பயமும், தயக்கமும் இல்லை

சென்னை: அரசியலுக்கு வருகிறாரா பா.ரஞ்சித்?... சென்னையை மையமாக வைத்து பல படங்களை கொடுத்தவர் இயக்குனர் பா ரஞ்சித். தன்னுடன் பணியாற்றிய உதவி இயக்குனர்களை வைத்து தற்போது படம் தயாரித்து வருகிறார்.

இவருடைய படங்களில் சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை வெளிப்படையாக பேசி உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட பா.ரஞ்சித்திடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அரசியலில் களம் காண்பீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பா ரஞ்சித் இப்போதைக்கு அரசியல்வாதியாக வருவேனா என்பது தெரியவில்லை.

தற்போது கலை, இலக்கியம் ஆகியவற்றில் செயல்பட ஆர்வமாக இருக்கிறேன். மேலும் அரசியலில் வருவதற்கு எனக்கு எந்த பயமும், தயக்கமும் இல்லை. அதை ஒரு மகிழ்ச்சியாக கொண்டு செல்ல தான் விரும்புகிறேன். எனக்கு இப்போது அது தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்பதை நான் தான் யோசித்தேன், அதேபோல் அம்பேத்கரை பற்றி பேச வேண்டும் என்பதும் என்னுடைய நிலைப்பாடு தான். யாரும் என்னிடம் வந்து இதை செய், அதை செய் என்று சொல்லவில்லை. எனக்கு பிடித்தால் அதை கண்டிப்பாக செய்வேன் என்று பா ரஞ்சித் கூறி இருந்தார்.

மேலும் பல மேடைகளில் திருமாவளவனுடன் ரஞ்சித் தோன்றியுள்ளார். ஒருமுறை பா ரஞ்சித்தின் அனைத்து முயற்சிக்கும் விடுதலை சிறுத்தை கட்சி துணை நிற்கும் என திருமாவளவன் கூறியிருந்தார். இதனால் திருமாவளவன் கட்சியில் பணியாற்ற விருப்பம் இருக்கிறதா என்ற கேள்வி பா ரஞ்சித்திடம் கேட்கப்பட்டது.

தற்போது பல கட்சிகள் இருந்தாலும் இதில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தை கட்சி மிக முக்கியமான ஒன்று. தற்போதும் அடித்தட்ட மக்களுக்காக திருமாவளவன் போராடி வருகிறார். வரும் காலங்களில் திருமாவளவனுடன் இணையலாம் என்பது போல பா.ரஞ்சித் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.