டெல்லி விமான நிலையத்தில் இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை: டெல்லி விமான நிலையத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை அவர் பதவியேற்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்த படைப்பாளர்களுக்கு ராஜ்யசபாவில் நியமன எம்.பி பதவி வழங்குவது மரபாக இருந்து வருகிறது. நடிகர் சிவாஜி கணேசன் உள்ளிட்டோர் இந்தப் பதவியில் ஏற்கெனவே இருந்துள்ளனர்.

அந்த வரிசையில், தற்போது இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, தா்மசாலா கோயில் நிா்வாக அறங்காவலா் வீரேந்திர ஹெக்டே, பிரபல திரைக்கதை எழுத்தாளா் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோருக்கும் இந்தப் பதவி தற்போது வழங்கப்பட்டுள்ளது. இளையராஜாவின் இத்தனை ஆண்டுகாலக் கலைச்சேவையைக் கெளரவிக்கும் விதமாக இந்த நியமன எம்.பி பதவி அமைந்துள்ளது.

கடந்த திங்களன்று நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டோர் மாநிலங்களவையில் பதவியேற்றுக் கொண்டனர். அப்போது ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, இளையராஜா என்று கூப்பிட்டவுடன் அவையில் இருந்த அனைவரும் கைத்தட்ட தொடங்கினர். ஆனால், இளையராஜா அவைக்கு வராததை பின்னர் அறிந்த உறுப்பினர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அன்றைய தினம் இளையராஜா எம்.பி.யாக பதவியேற்கவில்லை.


அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இளையராஜா சென்றதால், அந்தக் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை எனத் தகவல் வெளியானது. இந்நிலையில் இளையராஜா நாளை ராஜ்யசபா எம்.பி.யாக பதவி ஏற்க உள்ளார். இதற்காக அவர் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி விமான நிலையத்தில் இளையராஜாவுக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.