விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் வழக்கறிஞர் அணி தொடங்க முடிவு

சென்னை: புதிதாக வழக்கறிஞர் அணி தொடக்கம்... நடிகர் விஜய்யின், அகில் இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தில் புதிதாக வழக்கறிஞர் அணி தொடங்கப்பட உள்ளது. அதற்கான ஆலோசனை கூட்டம் தலைமை அலுவலகத்தில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான தீவிர முயற்சியில் தற்போது இறங்கியுள்ளார். அதற்கான அடுத்தடுத்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் திருச்சியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தின் மத்திய மாவட்ட செயலாளர் செந்தில்,ஸ்பா என்ற பெயரில் தவறாக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அதே சமயம் குற்றம் சாட்டப்பட்டதற்காக மட்டுமே அமைப்பை விட்டு நீக்க முடியாது. நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை அமையும் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியில் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் வழக்கறிஞர் அணி தொடங்க இருப்பதாகவும், அதற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை பனையூரில் உள்ள மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வாரியாக உள்ள வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மற்றும் நேர்காணல் நடத்தப்பட உள்ளதாம். விஜய் தற்போது வெளிநாட்டில் உள்ளதால் தமிழ்நாடு திரும்பிய பிறகு நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்படும் என்று கூறுகின்றனர்.

மேலும் இது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கூறியதாவது, தளபதி விஜயின் தற்போதைய நடவடிக்கைகள் பொது வெளியில் அதிக விவாதிக்கப்படுகிறது. இது அரசியல் கட்சிகளை பதற்றம் அடைய செய்திருக்கிறது.

இதனால் நிர்வாகிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சொல்லப்படுவதை அடுத்து கட்சியினுடைய பாதுகாப்பு, நிர்வாக மற்றும் உறுப்பினர்களுடைய நலன்களை கருதி, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதை எளிதாக்கும் வகையில் புதிதாக வழக்கறிஞர் அணி தொடங்கப்பட உள்ளது என்று குறிப்பிட்டார்.