நடிகர் சூரியின் நிலமோசடி வழக்கிலிருந்து நீதிபதி திடீர் விலகல்

நடிகர் சூரி கடந்த சில நாட்களுக்கு முன்னர், நடிகர் விஷ்ணுவிஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா என்பவர் மீது நிலமோசடி வழக்கு பதிவு செய்திருந்தார். இந்தநிலையில் இந்த வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் தந்தை தயாரித்த 'வீர தீர சூரன்' என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக சூரி ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பதும், இந்த படத்திற்கு சூரியின் சம்பளம் 40 லட்சத்திற்கு பதிலாக சிறுசேரியில் ஒரு நிலத்தை வாங்கி தருவதாகவும் அதற்காக கூடுதலாக சூரி 2 கோடியே 70 லட்சம் தந்ததாகவும், ஆனால் நிலத்தை வாங்கித் தராமல் விஷ்ணுவிஷாலின் தந்தை இழுத்தடித்ததாகவும் போலீசில் சூரி புகார் செய்திருந்தார். இந்த புகார் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் ரமேஷ் குடவாலா கைது செய்யப்பட வாய்ப்பு இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அவர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார் என்பதும், ஆனால் முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூரி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நடிகர் சூரி பதிவு செய்த மோசடி வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக இந்த வழக்கை விசாரணை செய்து வந்த நீதிபதி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கிலிருந்து நீதிபதி விலகியதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை