நடிகர் ரஜினியின் 172வது படத்தை இயக்க போவது லோகேஷ் கனகராஜ்?

சென்னை: ரஜினியின் 172-வது படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணையவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. அதேபோல், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் ரஜினி நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநர் ஞானவேலுடன் இயக்கத்தில் தனது 170-வது படத்தில் நடிக்க ரஜினி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், ரஜினியின் 172-வது படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணையவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிடும் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க லோகேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். விக்ரம் படத்திற்குப் பின் கைதி - 2 படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கினார்.

தற்போது, 2024 இறுதியில் ரஜினி படத்தை முடித்துவிட்டு கைதி - 2 பணிகளை லோகேஷ் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.