இந்தியன் -3 உருவாக வாய்ப்பு என்று உதயநிதி ஸ்டாலின் தகவல்

சென்னை: இந்தியன் படத்தின் 3-வது பாகம் உருவாக வாய்ப்புள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் இதன் முக்கியக் காட்சிகளைக் கண்ட கமல் தன் டிவிட்டர் பக்கத்தில், ‘‘இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் ஷங்கர்.

இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி. அன்பன் கமல்ஹாசன்” எனப் பதிவிட்டிருந்தார்.

மேலும், ஷங்கருக்கு விலை உயர்ந்த கைக்கடிகாரத்தைப் பரிசளித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் கமல். இந்நிலையில், மாமன்னன் படத்திற்காக நேர்காணல் ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘ இந்தியன் - 2 திரைப்படம் சிறப்பாக வந்திருக்கிறது. கமல் சாரும் ஷங்கர் சாரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இரண்டாம் பாகத்திற்காக அதிகக் காட்சிகளை ஷங்கர் எடுத்திருக்கிறார். தேவைப்பட்டால் இப்படத்தின் மூன்றாவது பாகம் உருவாக வாய்ப்புள்ளது.’ எனக் கூறியுள்ளார்.

லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.