மார்கழி திங்கள் படம் வெற்றி அடையும்... பாரதிராஜா பாராட்டு

சென்னை: மார்கழி திங்கள் படம் வெற்றி அடையும். அப்போது என் மகன் பற்றி பேசுகிறேன் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்தார்.

நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'மார்கழி திங்கள்'. புதுமுகங்களை கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

'மார்கழி திங்கள்' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் மனோஜ் பாரதிராஜா பேசுகையில், 18 வருட போராட்டத்திற்கு பிறகு நான் இப்போது இயக்குனராக வந்திருக்கிறேன்.

சுசீந்திரன் சாரிடம் நான் நிறைய கதைய சொல்லியிருந்தேன். திடீர் என்று ஒரு நாள் கூப்பிட்டு 'நீங்க படம் பண்ணுங்க' என்று கூறிவிட்டார். அதன் பின்னர் 15 நாட்களில் ஷூட்டிங் தொடங்கியது. என்னுடைய முதல் படத்தில் இளையராஜா மற்றும் பாரதிராஜா இணைந்திருப்பது எனக்கு பெருமை என்றார்.

பாரதிராஜா பேசுகையில், நடிகனாக இருந்து இயக்குநராக மாறுவது சுலபமில்லை, என் மகன் மீது நம்பிக்கை உள்ளது. டிரைலர் தான் காட்டியிருக்கிறான், மிக அற்புதமாக செய்துள்ளான். இந்தப் படம் வெற்றியடையும், அப்போது என் மகனை பற்றி பேசுவேன் என்று பேசினார்.