விபிஎப் கட்டணம் செலுத்தாவிட்டால் புதிய படங்கள் கிடையாது; பாரதிராஜா கொடுத்த அதிர்ச்சி

பாரதிராஜா கொடுத்த அதிர்ச்சி... VPF கட்டணத்தை திரையரங்குகள் செலுத்தாவிட்டால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியிடப்படாது என்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அறிவித்துள்ள அவர், ‘ திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். விபிஎஃப் கட்டணம் செலுத்துவது தொடர்பான பிரச்னையில் சுமுக முடிவு எடுக்கப்படும் வரை புதிய படங்கள் வெளியாகாது.

டிஜிட்டல் நிறுவனங்கள் மாஸ்டரிங், குளோனிங், டெலிவரி மற்றும் சேவைக்கான ஒரு முறை கட்டணத்தை மட்டுமே செலுத்த முடியும். ஒரே ஒரு முறை விபிஎஃப் கட்டணம் செலுத்தும் முறைக்கு திரையரங்கு உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே படங்களை வெளியிடுவோம்’ என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு திரைப்படங்களை திரையிடுவது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் காணொலிக் காட்சி மூலம் நாளை ஆலோசனை நடத்தும் நிலையில் பாரதிராஜாவின் இந்த புதிய நிபந்தனை பேசும் பொருளாகியுள்ளது.

முன்னதாக தமிழகத்தில் ஊரடங்கு வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதி தவிர மற்ற பகுதிகளில் அனைத்துத் திரையரங்குகளையும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதில் 50 சதவீதம் இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி, கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.