முத்தையா முரளிதரன் பயோபிக்... விஜய் சேதுபதிக்கு எதிராக குவியும் எதிர்ப்பும் ஆதரவும்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகவிருக்கும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான '800' என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று ஈழத் தமிழர்கள் உள்பட ஒரு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன என்பதும் ஆனால் அதையும் மீறி விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் சேதுபதிக்கு எதிராக நேற்று மாலை முதல் ட்விட்டரில் ஹேஷ்டேக் ஒன்று இந்திய அளவில் டிரெண்ட் ஆனது என்பதும் அதில் விஜய் சேதுபதி குறித்து தரக்குறைவான கருத்துக்களை ஒரு சிலர் பதிவு செய்து வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய்சேதுபதி ரசிகர்களும் #WeStandWithVijaySethupathi என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதையும் டுவிட்டரில் டிரெண்ட் செய்தனர்.

மேலும் முரளிதரனின் கிரிக்கெட் வாழக்கை மட்டுமே இந்த படத்தில் இருக்கும் என்று விஜய்சேதுபதி உறுதியளித்ததாகவும், ஆனால் நேற்று வெளியான மோஷன் போஸ்டரில் இலங்கையில் நடந்த போர் குறித்த காட்சிகள் இருப்பதாகவும் ஈழத்தமிழர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் தமிழர் ஒருவரின் கிரிக்கெட் அணிக்கு முத்தையா முரளிதரன் பயிற்சியாளராக இருக்கின்றார் என்றும், ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழர்கள் இதற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பது ஏன் என்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருவதால் டுவிட்டரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.