அரசியல் மாஸ்டர் விஜய்... இந்தியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

அரசியல் மாஸ்டர் விஜய்... 2021-ன் அரசியல் மாஸ்டர் விஜய் என்று இந்தியில் போஸ்டர் தயாரித்து மதுரையில் ரசிகர்கள் ஒட்டியது சர்ச்சையாகியுள்ளது.

நடிகர் விஜய் அரசியல் நடைமுறைகளை விமர்சித்து, திரைப்படப் பாடல் வெளியீட்டு விழாக்களில் பேசியுள்ளார். அப்போது எல்லாம் அந்த கருத்துக்கள் விவாதமாக்கப்படும். இந்நிலையில், நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் நடிகர் விஜயின் ரசிகர் மன்றம் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்று குறிப்பிட்டார்.

இதனை அடுத்து முன்னாள் முதலமைச்சர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோருடன் நடிகர் விஜய் இருக்கும் சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டது. அதில் 2021 இல் விஜய் தலைமையில் ஆட்சி அமையட்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதுவும், ரஜினியைப் போல் அல்லாமல் விஜய் நேரடியாக அரசியல் களத்திற்கு வருவார் என்று ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.

முன்னதாக நடிகர் விஜய் திருச்சி, மதுரை, கடலூர், மும்பை ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் பனையூர் இல்லத்தில் வைத்து ஆலோசனை நடத்தினார். அதன்பின் மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. எனவே நடிகர் விஜய்யின், அரசியல் கட்சி பற்றிய அறிவிப்புக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், பாஜக பாணியில் நடிகர் விஜயின் ரசிகர்கள், மதுரையில் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அதில், 2021 இல் அரசியல் மாஸ்டர் (2021il POLITICAL MASTER) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியில் வசனம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இது என்.சதீஷ்குமார் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே இந்தி எதிர்ப்பு கடுமையாக இருந்து வரும் சூழலில், நடிகர் விஜய் அரசியல் பற்றிய சுவரொட்டியில் இந்தி வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.