தயாரிப்பாளர் வி.ஏ. துரையின் பரிதாப நிலை

சென்னை: தயாரிப்பாளர் வி.ஏ.துரையின் பரிதாப நிலை குறித்து கோலிவுட்டில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருந்த வி.ஏ.துரை, தற்போது உடல்நிலை சரியில்லாமல், மிகவும் ஒல்லியாக, இருக்க இடமின்றி, சிகிச்சைக்கு பணமின்றி உள்ளார். நடிகர் சூர்யா தான் முதலில் வந்து உதவி செய்ததாக சிலர் நேற்று வீடியோ வெளியிட்டுள்ளனர்.

பிரபல முன்னணி தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடம் அசோசியேட்டாகப் பணியாற்றிய வி.ஏ.துரை, பின்னர் எவர்கிரீன் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி விக்ரம், சூர்யா, விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்கள் மற்றும் சில தோல்வி படங்களையும் தயாரித்துள்ளார்.

‘என்னமா கண்ணு’, ‘லூட்டி’, ‘பிதாமகன்’, ‘கஜேந்திரா’, ‘நாய்க்குட்டி’ போன்ற படங்களைத் தயாரித்தவர். குறிப்பாக இவரது தயாரிப்பில் பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா இணைந்து நடித்த ‘பிதாமகன்’ திரைப்படம் தேசிய விருதை வென்றது.

சில தோல்விப் படங்களால், சொத்துக்கள் அனைத்தையும் இழந்து, குடும்பத்தால் கைவிடப்பட்டவர், தங்குவதற்கு வீடு கூட இல்லாமல், சர்க்கரை நோயால், இரு கால்களிலும் புண்கள் ஏற்பட்டு, பரிதாபமான நிலையில் இருந்தார்.

இதுகுறித்து இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் ஏற்கனவே தெரிவித்த நிலையில், அவரது உதவியுடன் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.ஏ.துரை உடல்நிலை மோசமடைந்ததால் வேறு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு குணமடைந்த அவர் சிகிச்சைக்கு பணம் இல்லாததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.