வரும் டிச.8ம் தேதி மறு வெளியீடு... ஆளவந்தான் படம் பற்றி தாணு தகவல்

சென்னை: நடிகர் கமல் நடித்த ஆளவந்தான் மறுவெளியீட்டுத் தேதியை தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். இதன்படி டிச.8ம் தேதி இந்த படம் மறு வெளியீடு செய்யப்படுகிறது.

கமல்ஹாசன் எழுதிய 'தாயம்' என்ற கதையை மையமாகக் கொண்டு கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆளவந்தான்'. நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடிக்க சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கியிருந்தார். தாணுவின் 'வி கிரியேஷன்ஸ்' தயாரித்த படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு மற்றும் பலர் நடித்தனர்.

வித்தியாசமான உளவியல் சிக்கலை பேசும் திரைக்கதையில் கமல் ஹாசன் இரு வேடங்களில் நடித்திருப்பார். கதாநாயகனாகவும் வில்லனாகவும் இரு மாதிரி தோரணையில் நடிப்பை வெளிபடுத்தி மிரட்டியிருப்பார்.

மேலும் இப்படம் பிரம்மாண்டமாகவும் தொழில்நுட்ப ரீதியில் சிறப்பாகவும் இருக்க வேண்டும் என்பதால் படத்திற்கான தொழில்நுட்ப கலைஞர்கள், வெளிநாட்டிலிருந்து கருவிகள் கொண்டு வரப்பட்டு படமாக்கியிருப்பார்கள். அனிமேஷன் காட்சிகள், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்று இந்திய சினிமாவில் தனித்துவமான முயற்சியில் இறங்கி பார்வையாளர்களுக்கு வித்யாசமான மற்றும் பிரம்மாண்டமான உணர்வை கொடுப்பதற்காக படக்குழு இறங்கியது.

இருப்பினும், அப்போதைய சூழலில் படக்குழுவினர் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. இந்நிலையில், மீண்டும் ஆளவந்தான் படத்தை மறுவெளியீடு செய்ய வேண்டும் என நீண்ட நாள்களாகவே கோரிக்கை எழுந்து வந்தது.

இதனைத் தொடர்ந்து, 22 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் ரீதியாக மேம்படுத்தப்பட்ட ஆளவந்தான் படத்தை விரைவில் உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்திருந்தார். தற்போது, அந்த அறிவிப்பை உறுதிப்படுத்தும் விதமாக, புதிய போஸ்டரை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார்.

அதில், படம் டிசம்பர் 8ஆம் தேதி மறுவெளியீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரஜினியின் முத்து திரைப்படமும் மறுவெளியீடாக வரும் டிசம்பர் 2ஆம் தெலுங்கு பதிப்பில் ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.