பிரபல தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி புற்றுநோயால் காலமானார்

சென்னை: புற்றுநோயால் காலமானார்... வாலி, வில்லன், சிட்டிசன் உள்ளிட்ட அஜித்தின் வெற்றிப் படங்களைத் தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி புற்றுநோயால் காலமானார்.

தமிழ் சினிமாவில் அஜித்தின் நண்பரும் தயாரிப்பாளருமான நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி அஜித் நடித்த ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜி, வரலாறு ,உள்ளிட்ட ஒன்பது திரைப்படங்களை தயாரித்தார்.

அதன் பிறகு விக்ரம் நடிப்பில் வெளியான காதல் சடுகுடு, சிம்பு நடித்த காளை, வாலு ஆகிய படங்களையும் தயாரித்திருந்தார். அடுத்தடுத்த படங்களை தயாரித்த எஸ்.எஸ் சக்கரவர்த்திக்கும் அவரின் நண்பர் அஜித்குமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில் தனது மகன் ஜான் நடிப்பில் ரேனிகுண்டா என்ற படத்தை தயாரித்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு தயாரித்த படங்கள் வெற்றியை பெறவில்லை. இதனால் சினிமா தயாரிப்பில் இருந்து எஸ்.எஸ்.சக்கரவர்த்தி விலகி இருந்தார்.

இறுதியாக விமல் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த விலங்கு என்ற இணைய தொடரில் காவல் அதிகாரியாக நடித்திருந்தார். அவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் புற்றுநோய் பாதிப்பால் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி அவதியுற்றார்.

எட்டு மாதங்களுக்கும் மேலாக கடுமையான நோயால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். அவரது உடல் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.