நடிகர் விஜய் கல்விக்கு உதவுவது மிகவும் வரவேற்கத்தக்கது என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார்


நடிகர் விஜய் 12-ம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை சந்திக்க இருப்பதாக கடந்த வாரம் அறிவித்தார். இதையடுத்து அதன்படி நேற்று 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

அதிலும் குறிப்பாக 600க்கு 600 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸை பரிசாக அளித்தார். இதை தொடர்ந்து பேசிய நடிகர் விஜய், மாணவர்கள் அம்பேத்கர், பெரியார், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், வருகங்கால வாக்காளர்களான நீங்கள் ஓட்டுக்கு காசு வாங்க கூடாது என்றும் கூறினார். இதேபோல் கல்வி மட்டுமே அழிக்க முடியாது சொத்து என்றும் அசுரன் திரைப்பட வசனத்தை மேற்கொள்காட்டி பேசினார். விஜயின் இந்த பேச்சுக்கு பலதரப்பினரும் பாராட்டு தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியதாவது:- நடிகர் விஜய் தொடர்ந்து உதவி செய்து வருகிறார். தற்போது நடிகர் விஜய் கல்விக்கு உதவுவது வரவேற்கத்தக்கது.

எல்லா நடிகர்களும் பொதுநல சேவையில் ஈடுபட்டு உள்ளனர். ரசிகர் மன்றம் மூலம் உதவிகளை செய்து வருகின்றனர். நான் சினிமாவுக்கு வந்ததில் இருந்து என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். அனைவரும் அரசியலுக்கு வரலாம். ஒவ்வொரு குடிமகனும் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவசியம். அதனால் யார் அரசியலுக்கு வந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான் என அவர் கூறினார்.