எதுக்கு பொண்ணா பொறக்குரோம்ன்னு தோணுது - பாடகி சின்மயி வருத்தம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரபரப்பு ஒரு பக்கம் இருக்கும் நிலையில் மற்றொரு பக்கம் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறந்தாங்கி பகுதியில் 7 வயது சிறுமி ஜெயப்பிரியா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது. தமிழக திரை உலகினர் பலர் ஜெயப்பிரியாவுக்கு நேர்ந்த கொடுமைக்கு குரல் கொடுத்தனர். அவர்களில் ஒருவர் பாடகி சின்மயி.

இந்த நிலையில் ஜெயப்பிரியாவின் கொடூரம் குறித்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்குள் தற்போது சசிகலா என்ற பெண்ணை இரண்டு சகோதரர்கள் குளிக்கும்போது ஆபாசபடம் எடுத்து அவரை மிரட்டி கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துவந்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் எல்லை மீறியதால் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் ஜெயப்பிரியா கொலையை அடுத்து சசிகலா கொலைக்கும் நீதி வேண்டும் என சமூக வலைதளங்களில் திரையுலக பிரபலங்கள், நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர். அதற்கான ஹேஷ்டேகும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த ஹேஷ்டேக்கை தனது டுவிட்டரில் பதிவு செய்த பாடகி சின்மயி, 'போதும்டா சாமி! எதுக்கு பொண்ணா பொறக்குரோம்ன்னு தோணுது' என்று மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். இதற்கு ஒரு நெட்டிசன் 'உங்களைப்போல தைரியசாலிகள் உருவாக வேண்டும்' என்று கமெண்ட் செய்துள்ளார். அதற்கு சின்மயி, 'உருவாகும் முன்னே கொன்னுறாங்களே' என்று விரக்தியுடன் பதிலளித்துள்ளார்.