சினிமாவை போன்று சில சம்பவங்கள் நிஜ வாழ்க்கையில் நடக்கிறது - நடிகை டாப்சி

குஜராத் மாநிலத்தின் அமைச்சர் ஒருவர் மகனின் நண்பர்களை பெண் போலீஸ் ஒருவர் கைது செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகை டாப்சி 'நாங்கள் சினிமா தயாரிப்பதை நிறுத்தி விட்டோம். ஆனால் அதற்கு பதிலாக நிஜ வாழ்க்கையில் சில சம்பவங்கள் நடந்து வருகிறது' என்று கூறியுள்ளார்.

குஜராத் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் குமார் கனானி. இவரது மகன் பிரகாஷ் கனானியின் நண்பர்கள் இரவு நேரத்தில் ஊர் சுற்றித் திரிந்ததாக தெரிகிறது. அப்போது ரோந்து சென்ற பெண் காவலர் சுனிதா, ஊரடங்கு நேரத்தில் வெளியே சுற்றித்திரிந்த அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த பிரகாஷ் கனானி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பெண் போலீசாருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பெண் காவலர் சுனிதா திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் இடமாற்றத்தை ஏற்காத சுனிதா விடுப்பில் சென்று உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த சம்பவம் குறித்து நடிகை டாப்சி தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த போது நாங்கள் கடந்த சில மாதங்களாக திரைப்படம் தயாரிப்பதை நிறுத்தி விட்டோம். ஆனால் அதற்கு இணையாக சில நிஜ சம்பவங்கள் நடந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. என்று கூறியுள்ளார். பெண் காவலர் சுனிதாவின் வீரம் குறித்து நடிகை டாப்ஸி கூறியுள்ள இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.