தியேட்டருக்குள் நரிகுறவப் பெண்ணை அனுமதிக்க மறுத்ததற்கு கடும் கண்டனம்

சென்னை: நரிகுறவப்பெண்ணை திரையரங்கில் அனுமதிக்க மறுத்ததற்கு நடிகர், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், நடிகை பிரியா பவானி சங்கர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடு பகுதியில் உள்ள திரையரங்கில் சிம்பு நடித்த ‘பத்து தல’ படத்தைப் பார்க்க 8 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் நரிக்குறவப்பெண் ஒருவர் படம் பார்க்க வந்தபோது, கையில் டிக்கெட் இருந்தும் அவர்களை தியேட்டருக்குள் அனுமதிக்க ஊழியர் மறுத்துவிட்டார். அவரை உள்ளே அனுமதிக்குமாறு பலமுறை வற்புறுத்தியும் அவர் அனுமதிக்கவில்லை.

இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி, தீண்டாமை என்று பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தங்களின் கவனத்துக்கு வந்ததும் உள்ளே அனுமதித்ததாக தியேட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

நரிகுறவப்பெண்ணை திரையரங்கில் அனுமதிக்க மறுத்ததற்கு நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், நடிகை பிரியா பவானி சங்கர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது. எனினும் முதலில் அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது”எனக்கூறியுள்ளார்.

நடிகை பிரியா பவானி ஷங்கர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ”எல்லோரும் அவங்க வேலையை பார்த்துட்டு போறப்ப டிக்கெட் இருக்குல்லா ஏன் உள்ள விட மாட்டேங்கிறீங்கன்னு கேட்ட அந்த குரல்தான் இதுபோன்ற செயலுக்கு எதிரான முதல் குரல். அவங்க உடைதான் திரையரங்க நிர்வாகிகளுக்கு பிரச்சினைன்னா அவர்கள் அறிய, அடைய வேண்டிய நாகரீகம் ரொம்ப தூரத்தில் இருக்கு” என்று கூறியுள்ளார்.