தமிழில் வெற்றி பெறாத திரைப்படத்திற்கு இந்தியில் மிகப்பெரிய வரவேற்பு

சூர்யா, சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் திருப்பதிசாமி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம் 'அஞ்சான்'. கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தின் டிரைலர் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் குறித்து பேட்டியளித்த இயக்குனர் லிங்குசாமி ’தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இந்த படத்தில் இறக்கியிருப்பதாக கூறியதும் இந்த படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் ஏற்படுத்தியது.

ஆனால் படம் வெளிவந்த ஒரு சில நாட்களில் இந்த படத்திற்கு தொடர்ச்சியாக நெகடிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கியதால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதுமட்டுமின்றி தமிழ் திரையுலகில் முதல் முதலாக ஒரு படத்தை கிண்டல் செய்து மீம்ஸ் உருவானதும் இந்த படத்தில் இருந்து தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழில் எதிர்பார்த்த வெற்றியை பெறாத ‘அஞ்சான்’ திரைப்படத்திற்கு இந்தியில் தற்போது மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் இந்த திரைப்படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூப்பில் வெளியானது. யூட்யூபில் இந்த திரைப்படத்தை 140 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பதும் இந்த திரைப்படத்தை பதிவு செய்த யூடியூப் சேனலுக்கு 40 மில்லியன் புதிய சப்ஸ்கிரபர்கள் கிடைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத 'அஞ்சான்' திரைப்படம் ஹிந்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.