இந்தியன்-2 படத்தின் பட்ஜெட்... அதிரடி முடிவெடுத்த இயக்குனர்

சென்னை: இந்தியன்-2 படத்தின் பட்ஜெட்டை வெகுவாக குறைத்துள்ளார் இயக்குனர் ஷங்கர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

லைக்கா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் படம் 'இந்தியன் 2'.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் ஆரம்பமாகியது. கமல்ஹாசன் இந்த வாரம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது.

இதனிடையே, எஞ்சியிருக்கும் காட்சிகளைப் படமாக்க போடப்பட்ட பட்ஜெட்டில் பெரும் தொகையை ஷங்கர் குறைத்துவிட்டாராம். அதனால் தயாரிப்பு நிறுவனமும் அந்தத் தொகையை உடனடியாக வழங்கத் தயாராகி விட்டார்களாம்.

தற்போது சென்னையில் இப்படத்திற்காக சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் பிரம்மாண்ட அரங்கம் தயாராகி வருகிறது. அதில் படத்தின் பல முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் படப்பிடிப்பை முடித்துத் தருவதாக ஷங்கர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதாம். 2023 கோடை விடுமுறையில் 'இந்தியன் 2' வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.