செத்து போய்விடுவேன் என்ற எண்ணம் வந்தது... நடிகை தமன்னா

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. இவர் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். தற்போது மீண்டும் ஐதராபாத்தில் தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். கொரோனா பாதிப்பு குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

எனக்கு கொரோனா தொற்று உறுதியானதும் மிகவும் பயந்து போனேன். சிகிச்சை எடுக்கும்போது, செத்து போய்விடுவேன் என்ற எண்ணம்தான் வந்தது. கொரோனா பயம் நிறைய இருந்தது. நிச்சயம் பிழைக்க மாட்டேன் என்றே தோன்றியது. மருத்துவர்கள்தான் என்னை காப்பாற்றினார்கள். அந்த கஷ்டமான நேரத்தில் எனது பெற்றோர்கள்தான் தைரியம் கொடுத்தனர்.

அந்த நேரத்தில் வாழ்க்கை எவ்வளவு விலை மதிக்க முடியாதது. உயிரோடு இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்று தோன்றியது. கபடி விளையாட்டை மையமாக வைத்து தயாராகும் படத்தில் நடித்து வருகிறேன். உடம்பை வலிமையாக வைத்துக்கொள்ள வேண்டிய நேரத்தில் கொரோனா வந்து விட்டதே என்று வருத்தமாக இருந்தது.

இப்போது தேறி வருகிறேன். கொரோனா வந்தவர்கள் பாதிபேருக்கு பயத்தில்தான் உயிர் போய்விடுகிறது என்று நினைக்கிறேன். அந்த பீதி இல்லாமல் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். தைரியம்தான் மனிதனுக்கு பாதிபலம். கொரோனா பாதித்து ஆஸ்பத்திரியில் இருந்தால் அவர்களுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருந்து தைரியம் கொடுத்தால் பிழைத்து கொள்வார்கள். இவ்வாறு தமன்னா கூறினார்.