சூரரை போற்று படம் ஓடிடியில் வெளியாவதை அடுத்து தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு

சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படம் ஓடிடியில் வெளியாவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதையடுத்து தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கினால் 5 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் புதிய படங்கள் இணைய தளமான ஓடிடியில் வெளியாகின்றன, ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின், வரலட்சுமி சரத்குமாரின் டேனி, வைபவ் நடித்த லாக்கப் ஆகிய படங்கள் ஓடிடி.யில் வெளி வந்தன. அடுத்து சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படத்தையும் அக்டோபர் 30-ந்தேதி இணைய தளத்தில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிரபல விநியோகஸ்தரும் தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகியுமான திருப்பூர் சுப்பிரமணியம் இது தொடர்பாக கூறியதாவது:- கொரோனாவால் தியேட்டர் அதிபர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். சினிமாவும் நெருக்கடியில் உள்ளது. இதை கவனத்தில் கொள்ளாமல் சூர்யா எடுத்துள்ள முடிவு தியேட்டர்களை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகுத்து விடும். இது தவறான முடிவு. இதுபோல் எங்களுக்கும் தியேட்டரில் என்ன படத்தை திரையிடுவது என்று முடிவு எடுக்க உரிமை இருக்கிறது என்றார்.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் இது தொடர்பாக கூறியதாவது:- சூர்யா எடுத்துள்ள தவறான முடிவை, அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது தொற்றுநோய் காலம். விரைவில் சகஜ நிலை திரும்பி தியேட்டர்கள் திறக்கப்படும். இந்த நிலையில் சூர்யா திரையுலகுக்கு தவறான வழியை காட்ட வேண்டாம் என்றார்.