ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் ராஜாவாக அமர்ந்துள்ள இளையராஜாவுக்கு இன்று பிறந்தநாள்

சென்னை: தமிழர்கள் மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இசை அரசனாக வீற்றிருக்கும் இளையராஜாவின் பிறந்தநாள் இன்று.

‘அவனின்றி ஓரணுவும் அசையாது’ என்பதுபோல, அவரின் இசையின்றி தமிழர்களின் ஒரு நாளும் நகராது. அரை நூற்றாண்டு காலமாக தமிழர்களின் நாடி, நரம்பு, மூச்சு, பேச்சு, இரத்தம் எல்லாவற்றிலும் இரண்டற கலந்தது இவரின் இசை என்றால் அது மிகையான புகழ்ச்சியல்ல. இந்திப்பாடல்கள் தமிழக வீடுகளில் பிரபலமடைய தொடங்கிய 70 களின் இறுதியில் “வராது வந்த மாமணியாய்” வந்து வீடு தோறும், தமிழ்மக்களின் இதயம்தோறும் நிறைந்தவர் ‘இசைஞானி’ இளையராஜா.

தனது அண்ணன் பாவலர் வரதராஜனுடன் மேடைகளில், நாடகங்களில் இசை மீட்டிக்கொண்டிருந்த ராசையாவின் திரையிசை அவதாரம் 1976ஆம் ஆண்டில் ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலமாக தமிழ்சினிமாவில் தடம்பதித்தது. மேற்கத்திய இசையும், தமிழர்களின் பாரம்பரிய இசையும் கலந்த அன்னக்கிளி படத்தின் பாடல்கள் தமிழ் சினிமாவையே ஸ்தம்பிக்கவைத்தது. யார் இந்த ராசையா என அனைவரையும் புருவம் சுருக்கி பார்க்க வைத்தது. 1976 இல் தமிழ்த்திரையிசையின் ராஜாவாக முடிசூடிக்கொண்டார் இளைராஜா.

1943 ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் ராமசாமி-சின்னதாயம்மாளுக்கு மகனாக பிறந்த ராசைய்யா, தனது அண்ணன்கள் பாவலர் வரதராஜன், ஆர்.டி,பாஸ்கர் மூலமாக இசைமேடையில் அறிமுகமானார். அன்னக்கிளி மூலமாக இளையராஜாவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தது பிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம். அன்னக்கிளி படத்திற்கு பின்னர் பாரதிராஜா இயக்கிய ’16 வயதினிலே’ படம் இளையராஜாவை புகழின் உச்சியில் அமர வைத்தது.

அதன் பின்னர் இளையராஜா தொட்டதெல்லாம் வெற்றிதான். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தியிலும் இவரின் பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றன. நாட்டுப்புற இசையில் பயணத்தை தொடங்கிய இளையராஜா, ஆகச்சிறந்த கர்நாடக இசைப்பாடல்களையும், மேற்கத்திய பாணி பாடல்களையும் உருவாக்கியவர்.