ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் வெந்தயத்தின் பயன்கள்

சென்னை: மேத்தி அல்லது வெந்தயம் இந்திய உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றாகும். வெந்தய விதைகள் மற்றும் இலைகளை பல வழிகளில் பயன்படுத்தலாம். பருப்பு, சப்பாத்தி அல்லது கீரையாக சேர்த்து சாப்பிடலாம்.

வெந்தயம் நம் உணவின் சுவையை அதிகரிப்பதுடன் பல வகை நன்மைகளையும் அளிக்கிறது. இந்த மசாலாப் பொருள் மருத்துவ குணங்கள் நிறைந்ததால் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

வெந்தய இலைகள் பல தாதுக்கள் மற்றும் வைட்டமின்களின் களஞ்சியமாகும். அவற்றில் தயாமின், ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின், நியாசின், வைட்டமின்கள் ஏ, பி6, சி, மற்றும் கே போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. வெந்தயத்தில் தாமிரம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்பு, செலினியம், துத்தநாகம், மாங்கனீஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களும் உள்ளன.

இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது: வெந்தயம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன, குறிப்பாக குறைந்த அடர்த்தியுடைய கொழுப்புப்புரதம் (எல்டிஎல்), கொழுப்பு மற்றும் ட்ரை கிளிசரைடுகளை உடம்பு உள் இழுத்துக்கொள்வதை தடுக்கும். இயற்கையான முறையில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும்.

இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது: வெந்தயத்தில் கேலக்டோமனன் இருப்பதால், இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இது சோடியத்தின் செயல்பாட்டை எதிர்த்து இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆரோக்கியமான இதயத்திற்கு யோகா செய்வதுடன் ஆரோக்கியமான உணவையும் உட்கொள்வது அவசியம்.

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் வெந்தயத்தை (விதைகள் அல்லது இலைகள் வடிவில்) கட்டாயம் சேர்க்க வேண்டும். வெந்தயத்தில் உள்ள இயற்கையான, கரையக்கூடிய நார்ச்சத்து கேலக்டோமனன், இரத்தத்தில் சர்க்கரையை உறிஞ்சும் விகிதத்தை குறைக்கிறது. இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும் அமினோ அமிலங்களும் இதில் உள்ளன.