வைட்டமின் ஏ, சி சத்துக்கள் நிறைந்த தர்பூசணி அளிக்கும் நன்மைகள்

சென்னை: தர்பூசணியால் கிடைக்கும் நன்மைகள்... உடலுக்கு அத்தியாவசிய தேவையான தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் ஏ, சி, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கின்றன.

தர்பூசணி விதைகளில் இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ளதால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அதிகரித்து ரத்தத்தை நன்கு சுத்தப்படுத்துகிறது. தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் ரத்தத்தில் நீர் சத்து சேர்ந்து, ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.

தர்பூசணி பழசாறுடன் இளநீர் கலந்து அருந்த வெயிலால் ஏற்படும் வெப்பம் குறையும். உடல் சூடு தணியும். தர்பூசணிப் பழச்சாறுடன் சிட்டிகை அளவு சீரகப்பொடி, சர்க்கரை சேர்த்து அருந்த நீர்த்தாரை எரிச்சல் நீங்கும்.

தர்பூசணிப் பழசாறுடன் பால் கலந்து அருந்த தொண்டை வலி மறையும். தர்பூசணி பழங்களை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, சிறுநீர் பைகளில் மூத்திர அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும்.

சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும். தர்பூசணியில் பொட்டாசியமும் அதிக அளவில் உள்ளது. இது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.

இதயத்துடிப்பை சீராக்கும். தர்பூசணியில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, ஆஸ்துமா பிரச்னை நெருங்காது.

தர்பூசணி பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உங்களின் தோலின் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி பளபளப்பை அதிகரித்து, சுருக்கங்களை போக்கி, இளமை தோற்றத்தை நீடிக்க செய்கிறது.