எலும்பிற்கு அதிக பலமும், உறுதியும் தரவல்லது கருப்பட்டி!

சென்னை: நமது பாரம்பரிய மற்றும் உலகின் முதன்மையான சுவையூட்டி பற்றி தெரிந்து கொள்வோமா!

கருப்பட்டி தான் உலகில் முதன் முதலில் மனிதன் பயன்படுத்திய இனிப்பூட்டி. தேன், இலுப்பை பூ ஆகியவற்றில் இருந்து மாறி உடலுக்குத் தேவையான இனிப்பினைப் பெற கருப்பட்டிக்கு மாறியது மனித சமூகம். இன்று நாம் பயன்படுத்தும் வெள்ளை சர்க்கரை மிகவும் தீங்கானது அதனை விடுத்து நமது தினசரி உணவு பயன்பாட்டிற்கு கருப்பட்டியை பயன்படுத்த வேண்டிய அவசியத்தை நாம் உணர வேண்டும்.

இன்று ஒரு 45 வயதுக்கு மேல் மூட்டு வலி, மூட்டு தேய்மானம் இல்லாத ஆட்களைக் காண்பது அரிது. மிகவும் உடல் நலனுடன் இருந்த சமூகம் இந்த 50 ஆண்டுகளில் எப்படி இவ்வளவு பலவீனப்பட்டது என்றால் அதற்கு முக்கிய காரணம் நமது தினசரி பயன்பாடுகளான சக்கரை, எண்ணெய், மற்றும் பால் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றமே.

இவை மூன்றையும் இன்று நாம் சரி செய்யவில்லை என்றால் இனி நம் குழந்தைகள் 30 வயதிலேயே உடல் நலன் இழக்கும் அபாயம் ஏற்படும். இதில் தினசரி நாம் சேர்க்கும் இனிப்பு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. கருப்பட்டி எலும்பிற்கு அதிக பலம் தரவல்லது அது மட்டுமின்றி சர்க்கரை நோயாளிகள் கூட சேர்த்துக் கொள்ள ஏதுவானது.

குறிப்பாக பனங் கருப்பட்டி அதீத மகிமை உடையது. தென்னங் கருப்பட்டி உடலுக்கு சூட்டினை தருவதால் தென்னங் கருப்பட்டி அதிகம் யாரும் பரிந்துரைப்பதில்லை. இருக்கும் பனை மரங்களையும் நாம் வெட்டி வருவதால் கருப்பட்டிக்கான கொள்முதல் குறைந்து கொண்டே வருகிறது இதனால் இப்பொழுதைய தேவையினை ஈடுகட்ட சர்க்கரைக் கட்டியில் கருப்பு நிறம் சேர்த்து கருப்பட்டி என்று தெரு எங்கும் விற்கத் துவங்கி விட்டனர்.

எனவே நல்ல பனங் கருப்பட்டி தானா என்று பார்த்து வாங்குவது மிகவும் அவசியம். ஒரு 100 கிராம் கருப்பட்டியினை தண்ணீரில் போட்டால் அது குறைந்தது 1 மணி நேரம் கரையாமல் இருக்க வேண்டும் இந்த எளிமையான நுட்பத்தைக் கொண்டு நல்ல பனங் கருப்பட்டியினைக் கண்டறியலாம்.