நறுமணம் கூட்டும் ஏலக்காயை அதிகம் எடுத்துக் கொண்டால் அபாயம்

புதுடெல்லி: ஏலக்காய் வெறும் நறுமணம் கூட்டும் பொருள் என்று மட்டும் வரையறுத்துவிட முடியாது. பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட ஏலக்காய் பல நோய்களிலிருந்து காப்பாற்ற உதவுகிறது ரத்த அழுத்தத்தை சீராக வைத்து மாரடைப்பு அபாயத்தைக் குறைப்பதிலும் ஏலக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

நறுமணமூட்டும் மசாலாவாகவும் பயன்படுத்தப்படும் ஏலக்காயின் கருப்புப் பக்கம் உள்ளது. மணத்தைக் கொடுத்து மனதை மயக்கும் ஏலக்காயை பயன்படுத்தி, தேநீர், பால் என சுவையாக பானங்களை அருந்துகிறோம். ஆனால், பாலில் ஏலக்காயை அதிகம் சேர்த்தால், அது ஆரோக்கியத்தைக் கெடுக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

சூடான பாலில் ஏலக்காயை சேர்ப்பது மிகவும் சுவையாக இருக்கும். பால் ஒரு முழுமையான உணவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. புரதங்கள், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. பாலுக்கு இளைத்தவனில்லை நான் என போட்டியிடும் ஏலக்காய், மசாலாப் பொருட்களின் ராணி என்றும் அழைக்கப்படுகிறது.

மருத்துவ மற்றும் சுவை குணங்களைக் கொண்டுள்ள ஏலக்காயை பாலில் சேர்த்து குடிப்பது வழக்கம். ஆனால் சுவையை அதிகரிக்க பாலில் அதிக ஏலக்காயை சேர்ப்பதும், தினசரி பயன்பாட்டில் ஏலக்காயை அதிகமாக சேர்ப்பதும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

ஏலக்காய் வலுவான சுவை கொண்டது. பாலில் ஏலக்காயை சேர்த்ததும், பாலின் இயல்பான சுவை மாறுகிறது. ஆனால் பாலுடன் சேரும் ஏலக்காய் சிலருக்கு வாயில் வித்தியாசமான மணம் தோன்றலாம். அப்போது, ஏலக்காய் சாப்பிடுவதை சில நாட்களுக்கு நிறுத்துவதன் மூலம் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.

ஏலக்காய் பாலில் இருக்கும் சில சத்துக்களால், சிலருக்கு வயிறு கலக்கி, வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். ஆனால் இதுபோன்ற பிரச்சனை வெகு சிலருக்கே ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.