நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உணவில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழி... நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டும் என்பதில், எல்லோரும் கவனமாக இருக்கிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு உணவில் உப்பை குறைப்பது அவசியம்.

உப்பில் இருக்கும் சோடியம் குளோரைடு, இரத்த அழுத்தத்தை உயர்த்தக்கூடும். அது இதய நோய்க்கு வழிவகுக்கும். அதனால் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் அதிக உப்பு பயன்படுத்துவது நல்லதல்ல என்பது டாக்டர்களின் பரிந்துரையாக இருக்கிறது. புதிய ஆராய்ச்சி ஒன்றும் 'நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு உப்பு நல்லதல்ல' என்று கூறுகிறது. இதுதொடர்பாக பான் பல்கலைக்கழகம் விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பியல் துறை பேராசிரியர் டாக்டர் கிறிஸ்டியன் குர்ட்ஸ், அதிகப் படியான உப்பு உட்கொள்வது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் கட்டமைப்பை பலவீனப்படுத்தும் என்பதை முதல் முறையாக நிரூபித்துள்ளோம். தினமும் ஒருவர் 5 கிராமுக்கு அதிகமாக உப்பு சேர்க்கக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. நாங்கள் தினசரி சாப்பிடும் உப்பின் அளவுடன் கூடுதலாக 6 கிராம் உப்பை சேர்த்து சிலரை ஆய்வுக்கு உட்படுத்தினோம்.

துரித உணவுகளான இரண்டு பர்கர்கள் மற்றும் பொரித்த உணவுகளில் உப்பை அதிகம் சேர்த்து சாப்பிட வைத்தோம். ஒரு வாரம் கழித்து அவர்களின் இஇரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தோம். பரிசோதனை முடிவில் உணவில் அதிக உப்பை சேர்த்து சாப்பிட ஆரம்பித்த பின்னர், அவர்களின் நோய் எதிர்ப்பு செல்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளானது தெரியவந்தது என்கிறார்.

உப்பில் இருக்கும் அதிகப்படியான சோடியம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக இதயம், சிறுநீரகங்கள், மூளை மற்றும் இரத்த நாளங்கள் பாதிப்புக்குள்ளாகும். உணவில் அதிகபடியான உப்பை சேர்த்தால் பருவமடைதல் தாமதமாகக்கூடும். கருத்தரிப்பதிலும் சிக்கல் ஏற்படக்கூடும். மன அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.