நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகமாகச் சாப்பிடுங்கள்...!

சென்னை: உடல் எடையை குறைக்கும் விஷயத்தில் அனைத்து சத்துக்களும் நிறைந்த, ‘சரிவிகித உணவு’ முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் உணவு முறை எத்தகையது?

நீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் காலை தேவையை நிறைவேற்றுகிறதா? அதனால் உங்கள் உடல் எடையை சீராக பராமரிக்க முடியுமா போன்ற சந்தேகங்களுக்கு விடை தெரிந்துகொள்ள, பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்.
1. வாரத்திற்கு ஒரு முறை மேல் காலை உணவைத் தவிர்க்கிறீர்களா? 2. வாரத்திற்கு ஒரு முறை மேல் மதிய உணவைத் தவிர்க்கிறீர்களா? 3. வாரத்திற்கு ஒரு முறை மேல் இரவு உணவைத் தவிர்க்கிறீர்களா? இந்தக் கேள்விகளுக்கு உங்களிடம் ‘ஆம்’ எனும் பதில் அதிகமாக இருந்தால், உங்கள் உணவு பழக்கத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். உணவைத் தவிர்ப்பது, குறிப்பாக காலை உணவைத் தவிர்ப்பதால், உடலின் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு உண்டாகும்.

இது உங்களின் எடை குறைப்பு முயற்சிக்குப் பலன் கிடைக்காமல் செய்துவிடும். 1. உங்கள் தினசரி உணவில் 5-க்கும் மேற்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் இருக்கிறதா? 2. நீங்கள் ஒவ்வொரு வாரமும், குறைந்தது 4 வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுகிறீர்களா?

இந்தக் கேள்விகளுக்கு உங்களிடம் ‘இல்லை’ எனும் பதில் அதிகமாக இருந்தால், நீங்கள் உணவில் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். தினசரி உணவில் 5 பங்கு அளவு காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்ப்பதால், உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கும்.

இவற்றில் இருக்கும் நார்ச்சத்து, உடல் எடை குறைப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நீர்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகமாகச் சாப்பிடுங்கள். பழச்சாறுகளுக்குப் பதிலாக, பழங்களை துண்டுகளாக வெட்டி சாப்பிடுங்கள். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பழத்துண்டுகள் மற்றும் பழச்சாறுகள், சேர்க்கப்பட்டிருக்கும் சர்க்கரையின் அளவை கவனமாகப் படியுங்கள். சாலட்டுகளில் சிரப் மற்றும் சாஸ் கலப்பதை தவிருங்கள். இதன் மூலம் தேவையற்ற கலோரிகள் உடலில் சேர்வதை தவிர்க்கலாம் .