கர்ப்பக்காலத்தில் குறிப்பிட்ட அளவோடு சாப்பிட வேண்டிய பழங்கள்

சென்னை: பழங்கள் பெரும்பாலும் ஆரோக்கியமானவைதான், பாதுகாப்பானவைதான். ஆனாலும் கர்ப்ப காலத்தில் குறிப்பிட்ட சில பழங்களை அளவோடு சாப்பிட வேண்டியதும், சில பழங்களை அறவே தவிர்ப்பதும் அவசியமாகிறது.

அதற்கு சில காரணங்கள் உண்டு. அந்த வகையில் சரியாகப் பழுக்காத பப்பாளி அல்லது பப்பாளிக்காயைச் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் உள்ள அதிக அளவிலான பப்பாயின் (papain) , கர்ப்பப்பை சுருங்குவதைத் தூண்டும் என்பதே காரணம்.

அடுத்தபடியாக தவிர்க்க வேண்டிய பழம் அன்னாசி. இதில் புரோமெலின் ( bromelain ) என்கிற என்ஸைம் மிக அதிக அளவில் இருப்பதால் இதுவும் கர்ப்பப்பை சுருங்குவதைத் தூணடக்கூடியது. கர்ப்ப காலத்தில் மிகக்குறைந்த அளவு ஃப்ரெஷ் அன்னாசிப்பழத் துண்டுகளை சாப்பிடுவதில் தவறில்லை. அது அளவை மிஞ்சாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

திராட்சைப்பழங்களில் என்ன பிரச்னை என சிலர் யோசிக்கலாம். கர்ப்பக்காலத்தில் அளவோடு இவற்றைச் சாப்பிடலாம். ஆனால் திராட்சை விளைவிக்கப்படும்போது சேர்க்கப்படுகிற பூச்சிக்கொல்லிகள்தான் பிரச்னையே. அவை ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். திராட்சை சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற நிலையில் அவற்றை முறையாகக் கழுவிச் சாப்பிட வேண்டியது முக்கியம்.

அதிக இனிப்புள்ள பழங்களைத் தவிர்ப்பது அல்லது அளவைக் குறைத்து உண்பதும் அவசியம். உதாரணத்துக்கு தர்பூசணி, வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம் போன்றவை. இவற்றிலுள்ள அதிகப்படியான இனிப்புச்சத்து, கர்ப்பக்கால நீரிழிவைத் தூண்டவும், எடை அதிகரிக்கவும் காரணமாகலாம்.

எனவே கர்ப்ப காலத்தில் எந்தச் சத்தும் குறைந்துவிடாதபடி சரிவிகித உணவுகளைச் சாப்பிட வேண்டும். அவற்றில் பழங்களும் இடம்பெற வேண்டும். அந்த வகையில் ஆப்பிள், மாதுளை, அவகாடோ, ஆரஞ்சு, கிவி, கொய்யா போன்ற பழங்களை பயமின்றி சாப்பிடலாம்.