ஆரோக்கியமான வாழ்கைக்கு நடைப்பயிற்சி அவசியம்!

நமது இயல்பு வாழ்கைக்கு உழைப்பும், உணவும் இன்றியமையாதது. பயிற்சிகளும், இயற்கை உணவுகளும் இனிய வாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்கின்றன. தினசரி நடை முறையில் கடின உழைப்பு, விளையாட்டு, கராத்தே, நடனம், யோகா, ஓட்டம் அல்லது தோட்ட பணிகள் அவசியம் தேவை.

அவசர, அதிவேக உலகில் தினமும் உழைப்பு, விளையாட்டு, பயிற்சிகளைச் செய்திட மறந்து சோம்பேறி ஆகிவிடுகிறோம். இதனால் நமது சுறுசுறுப்புக் குறைகின்றது மெட்டாபாலிசம் சீர்குலைகிறது. உடல் திசுக்களில் லேக்டிக் அமிலம் சேர்ந்து தசை இறுக்கத்தை அதிகரிக்கிறது மனதில் அழுத்தம் உருவாகிறது.

எனவே உழைப்பு, பயிற்சிகள், விளையாட்டு ஆகியவற்றுக்கு மாற்றாக நடைபயணம், நடை பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும். நெடுநாள் பிணியாளர்கள் நலம் பெற நடைப்பயிற்சி உதவி புரிகிறது.

நடப்பது நமது கால்களுக்கு, நமது உடலுக்கு, மனதிற்கு ஒரு புதுசக்தியையும், தெம்பையும் தருகின்றது. உடல் நலிவைக் குறைத்து உடல் வலிவைத் தருகின்றது. பிணிகள் குறைய, மறைய வாய்ப்பை உருவாகித் தருகின்றது.