வென்டிலேட்டர் கொள்முதலில் ஊழல் செய்த சுகாதாரத்துறை மந்திரிக்கு 3 மாதங்கள் சிறை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருவதால் வெண்டிலேட்டரின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே கொரோனா சிகிச்சைகாக வெண்டிலேட்ரை ஸ்பெயினிடம் இருந்து வாங்க பொலிவியா முடிவு செய்தது. இதற்காக முதல் கட்டமாக 170 வென்டிலேட்டர்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் படி வென்டிலேட்டர்கள் கொள்முதலின் மொத்த மதிப்பு 5 மில்லியன் டாலர்கள் ஆகும். இந்த கொள்முதல் அந்நாடு சுகாதாரத்துறை மந்திரி மார்சிலே நவஜென்ஸ் தலைமையில் நடைபெற்று பணமும் ஸ்பெயின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், ஸ்பெயின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட வென்டிலேட்டர்கள் உலக சுகாதார அமைப்பின் தர நிர்ணய அளவுகோளை பூர்த்தி செய்யவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

இந்த தகவல் வெளியானதையடுத்து அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வென்டிலேட்டர் கொள்முதலுக்கு தலைமை ஏற்ற சுகாதாரத்துறை மந்திரி மார்சிலே நவஜென்சின் பதவியை அந்நாடு அதிபர் பறித்தார். மேலும், ஊழல் செய்த குற்றத்திற்காக நவஜென்ஸ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த ஊழல் தொடர்பாக அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் மார்சிலே நவஜென்ஸ் வென்டிலேட்டர் வாங்குவதில் ஊழல் செய்தது நிரூபணம் ஆனது. இதையடுத்து வென்டிலேட்டர் கொள்முதலில் ஊழல் செய்த குற்றத்திற்காக நவஜென்சுக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இந்த விவகாரத்தில் பொலிவியா முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி மார்சிலே நவஜென்ஸ் மற்றும் அவருக்கு உதவி செய்த அதிகாரிகள் உள்பட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.