கொரோனாவால் பாதிக்கப்படும் மனநலத்தை சரிசெய்வது எப்படி ?

கொரோனா பாதித்தவர்களின் மனநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பற்றி ஏராளமான ஆய்வு முடிவுகளை ‘லான்செட் ஜர்னல்’ வெளியிட்டிருக்கிறது. அதில் ‘கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 72 சதவீதம் பேர் மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக’ கூறுகிறது. இந்த மனஅழுத்தம் நோயாளிகள் அனைவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மனஅழுத்தத்தின் அளவு ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது. அதே நேரத்தில் நோயில் இருந்து மீண்டதும், பெரும்பாலானவர்கள் மனஅழுத்தத்தில் இருந்தும் விடுதலையாகிவிடுகிறார்கள்.

ஒரு சிலருக்கு தற்கொலை எண்ணமும் தோன்றலாம். அப்படிப்பட்டவர்கள் கவுன்சலிங் மற்றும் சிகிச்சைகளுக்கு தங்களை உட்படுத்திக்கொள்ளவேண்டும். ‘கொரோனா ஒரு நோய்தான். சரியான சிகிச்சையால் அதில் இருந்து பரிபூரணமாக குணமடைந்துவிடமுடியும்’ என்ற நம்பிக்கையை மனதில் விதைத்தால், அவர்களது மனநலம் மேம்பட்டுவிடும். பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தீவிரமான மனஅழுத்தத்திற்கு உள்ளாகிவிடுகிறார்கள். அதில் இருந்து அவர்கள் விரைவாக மீண்டுவிடவேண்டும்.

கொரோனாவை பற்றிய விஞ்ஞானபூர்வமான தகவல்களைவிட கட்டுக்கதைகள் சமூகவலைத்தளங்களில் மிக அதிகமாக உருவாகின்றன. மனோரீதியான பலம் இல்லாதவர்கள் கொரோனா பற்றிய கட்டுக்கதைகளை படித்துவிட்டு, அது பற்றியே அடுத்தவர்களிடம் பேசிப்பேசி புலம்புகிறார்கள். கொரோனா குறித்தும், அது பரவும் விதம் குறித்தும், அதற்கான தற்காப்பு முறைகள் குறித்தும் கிட்டத்தட்ட அனைவருக்குமே தெரிந்துவிட்டது. இனியும் மூச்சுக்கு மூச்சு கொரோனா பற்றி பேசிக்கொண்டே இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

பாதுகாப்பு முறை களை மட்டும் கடைப்பிடித்துக்கொண்டு அவரவர் வேலைகளை செய்துகொண்டிருந்தால் போதுமானது. கொரோனா தனக்கு ஏற்பட்டதை அவமானமாக எடுத்துக்கொண்டவர்களும், அதனால் ஏற்பட்ட குற்றஉணர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களும் இந்தியாவிலும் உண்டு. கொரோனாவால் புதிய தொடர்கள் எதுவும் குறிப்பிட்ட காலம் வரை ஒளிபரப்பாகவில்லை. ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த தொடர்களை பார்த்து பொழுதுபோக்கிக் கொண்டிருந்த முதியோர்கள் புதிய தொடர்களை பார்க்க முடியாமல் இருந்த சமயத்தில் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். தற்போது புதிய தொடர்கள் ஒளிபரப்பான பிறகே அவர்கள் படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்பியிருக்கிறார்கள்