வீட்டில் அமர்ந்தபடி அலுவலக வேலைகளை செய்யும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

வீட்டில் அலுவலகப் பணி என்பது இயல்பான விஷயமாக மாறிப்போனாலும் அதனால் உருவாகியிருக்கும் புதிய ஆபத்துகளை எதிர்கொள்ளவும் பழகிக்கொள்ள வேண்டுமோ என்ற அச்சமே பல ஊழியர்களின் மனநிலையாக உள்ளது. Work From Home வாழ்க்கைமுறையால் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு ஆய்வு அதிர்ச்சி அளிக்கிறது. பெண்களில் 20 - 60 வயது கொண்ட பெண்கள் வரை முதுகு வலி, தோள்பட்டை வலி, கழுத்து வலி ஆகிய குறைகளால் பாதிக்கப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

அந்த ஆய்வில் ஆரம்பத்தில் வீட்டில் அலுவலக வேலை என்பது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அதை அனுபவிக்கும்போது அதில் உள்ள சிக்கல்கள் புரிகிறது எனக் கூறியுள்ளனர். மேலும் நீண்ட நேர வேலை சுமை, தவறான அமரும் அமைப்பு, சரியான நாற்காலி, அமர்ந்து வேலை செய்யும் சூழலின்மை, லாப்டாப், கணினி வேலை செய்ய ஏதுவாக இல்லை என பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

இது தவிர வீட்டு வேலைகளையும் தாங்கள்தான் செய்ய வேண்டிய நிர்பந்தம், குழந்தைகள் இருந்தால் அவர்களின் கல்வி, ஆன்லைன் பாடங்களுக்காக ஒத்துழைப்பு அளித்து கற்றுத்தருவது, அதிக எடை கொண்ட சிலிண்டர், தண்ணீர் கேன் போன்றவற்றையும் தாங்களே தூக்கும் நிலை என இவை அலுவலகப் பணி தாண்டிய கூடுதல் சுமையாக அதிகரித்துள்ளன.

இவை ஒட்டுமொத்தமும் சேர்ந்து அவர்களுக்கு முதுகுவலி, கழுத்துவலி, தோள்பட்டை வலி என பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஆண்கள் வெளியே சென்று வருவதும் , பெண்கள் வீட்டு வேலைகள் மொத்தமாக கவனித்துக்கொள்வதுமாக இருப்பதால் அவர்கள் நடக்கும் நேரம் கூட குறைந்துவிட்டது. அவர்களுக்கான நேரம் என்பதும் இல்லாமல் போய்விட்டது.