சிறந்த நோய் தீர்க்கும் மருத்துவ குணம் கொண்ட கண்டங்கத்திரி

சென்னை: தாங்கள் அறிந்தவற்றை தங்கள் சந்ததியினரின் வாழ்விற்கும் பயன் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் நாமும் அறிந்து கொள்ள வழி வகை செய்தனர். சாதாரண தலைவலியில் இருந்து இருதயத்தை சீராக துடிக்க செய்யும் மூலிகைகள் வரை நம் முன்னோர்கள் அறிந்து வைத்து இருந்தனர்.

அப்படி சிறந்த நோய் தீர்க்கும் ஒன்றுதான் கண்டங்கத்திரி. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வயல்களின் ஓரத்திலும், தரிசு நிலங்களிலும், திறந்தவெளி புதர்க்காடுகள் மற்றும் சாலையோரங்களில் இயல்பாக வளரும் தன்மை கொண்டதுதான் கண்டங்கத்திரி.

இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் என்று கண்டங்கத்திரி தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவை. கண்டங்கத்திரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என்ற பல பெயர்கள் இதற்கு உண்டு.

கண்டங்கத்திரி பழங்கள் மற்றும் தண்டுகள் நுண்ணுயிர்களை எதிர்க்கும் மருத்துவப் பண்பு கொண்டுள்ளது. இது கோழையை அகற்றும், சிறுநீர் பெருக்கும், குடல்வாயு அகற்றும். கண்டங்கத்திரி வேர், சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டது.

இதன் பழங்கள் பழங்கள், தொண்டை வறட்சி, மூச்சுக்குழல் அழற்சி, தலைவலி, காய்ச்சல் போன்றவற்றை குணமாக்கும் தன்மை கொண்டது. உடலில் வியர்வை துர்நாற்றம் அதிகம் உள்ளவர்களுக்கும் மிகவும் பயன் தரும் மருத்துவ குணம் கொண்டது கண்டங்கத்தரி இலை.

இதன் இலையை எடுத்து நன்றாக இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி வடிகட்டி கொள்ள வேண்டும். இதை உடலில் வியர்வை துர்நாற்றம் அதிகம் உள்ளவர்கள் பூசிவர நாற்றம் முற்றிலும் நீங்கும். கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வடித்து வைத்துக் கொள்ளுங்கள். இதை தலைவலி, கீல்வாதம் முதலிய வாத நோய்களுக்கு பூசி வர அவை நீங்கும்.

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்தி பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுக்கலாம். பல் வலிக்கும், பல்லில் இருக்கும் கிருமிகளை போக்கவும் கண்டங்கத்திரி பழத்தின் விதைகள் பயன்படும்.