புடலங்காய் உண்போம்... உடலை பேணுவோம்... நோயை தூர விரட்டுவோம்

சென்னை: உடலை ஆரோக்கியமாய் வைத்துக்கொண்டால் நோய்கள் பல மைல் தூரத்தில் நின்று விடும் என்பது நம் முன்னோர்களின் கூற்று. அதற்காகவே சத்துள்ள ஆகாரங்களையும், காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொண்டனர்.

பார்த்து, பார்த்து அவர்கள் சேர்ந்த அற்புதமான சத்துக்கள் கொண்ட காய்கறிகளும், கீரை வகைகளும் இன்று பாதியளவு கூட நாம் சேர்த்துக் கொள்வதில்லை என்பதுதான் உண்மை.

நம் முன்னோர்கள் ஆரோக்கியம் அளிக்கும் செடி, கொடி, மர வகைகளை வீட்டைச் சுற்றியும், தோட்டங்களிலும் வளர்த்து வந்தனர். வேப்பமரம் சுத்தமான ஆக்ஜிசனை பெற்று வந்தனர். அதுபோல்தான் நார்சத்து நிறைந்த புடலங்காயின் பயன்களை நன்கு அறிந்து வீட்டின் கொல்லைப்புறம் மற்றும் தோட்டத்தில் சாகுபடி செய்து வந்தனர்.

இளத்தல், கொத்து, நாய், பன்றி, பேய் அட இதெல்லாம் புடலங்காயில் உள்ள வகைகள். இத்தனை வகைகள் இருந்தாலும் நன்று அறிந்த நம் முன்னோர்கள் உணவிற்காக பயன்படுத்தியது கொத்துப்புடல் மட்டுமே.

கிராமங்களில் அதிக செலவின்றி தங்களுக்கு குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை விளைவிப்பதை இன்றும் தொடர்ந்து வருகின்றனர். அதில் கீரைகள், கறிவேப்பிலை, முருங்கை, அவரை, புடலை, கத்தரி, வெண்டை, எலுமிச்சை, தென்னை என கண்டிப்பாக இடம் பிடிக்கும்.

நம் முன்னோர்கள் உடலை ஆரோக்கியமான பேணியதால்தான் நீண்ட ஆயுளுடனும், நோய் நொடியின்றியும் வாழ்ந்து வந்தனர். இப்போது அவ்வாறு இருக்க முடியுமா...? இல்லை என்று சொன்னாலும்... தற்போது ஆரோக்கியத்தின் மீது மக்கள் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டனர்.

இதனால் மாடியில் தோட்டம் அமைத்து காய்கறிகள் சாகுபடி செய்ய ஆரம்பித்துள்ளனர். ஒரே வித்தியாசம்... வீட்டின் பின்புறம் மண்ணில் வளர்ந்த செடிகள் இப்போது தொட்டியில் மாடியில் வளர்கிறது.

இப்படி வீட்டில் விளைந்த இயற்கையான காய்கறிகளை சாப்பிடும் மனநிலை மக்கள் மனதில் அதிகளவில் ஏற்பட ஆரம்பித்து விட்டது. புடலங்காய் இந்தியாவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. இது சுவை மிகுந்த காய் என்பதை விட மருத்துவக்குணங்கள் நிறைந்தது என்றே கூற வேண்டும். புடலங்காயை அதிகளவில் உணவில் சேர்ப்பதில் தென்னிந்தியர்கள்தான் முன்னிலையில் உள்ளனர்.

புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது சரியானதல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சியுள்ள காயையே பயன்படுத்த வேண்டும். அதில்தான சத்துக்கள் நிரம்பி இருக்கும்.

உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால் தேக மெலிவு மாற்றம் அடைந்து உடல் பருமனடையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.