ரத்தஅணுக்கள் உற்பத்திக்கு அருமருந்து செம்பருத்தி மணப்பாகு

சென்னை: ரத்தஅணுக்கள் உற்பத்தி போன்றவைக்கு அருமருந்து என்றால் அது செம்பருத்தி பூக்களால் செய்யப்படும் செம்பருத்தி மணப்பாகுதான். செம்பருத்தி பூ அடர்ந்த சிவப்பு நிறத்துடன் மலரக்கூடியது.

இதன் இதழ்கள் அடுக்குகளாகவோ அல்லது ஒற்றை வரிசையிலோ இருக்கும். பார்ப்பதற்கு மிக அழகாக காணப்படும் இந்த செம்பருத்தி பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. செம்பருத்தி பூவில் தயாரிக்கப்படும் செம்பருத்தி தேநீர், செம்பருத்தி லேகியம் என்ற வரிசையில் செம்பருத்தி மணப்பாகு என்பதும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள், மலட்டுத்தன்மை, வெள்ளைப்படுதல், உடல்சூடு, ரத்தசோகை, கண் எரிச்சல், ரத்தஅணுக்கள் உற்பத்தி போன்றவைக்கு அருமருந்து இந்த செம்பருத்தி பூக்களால் செய்யப்படும் செம்பருத்தி மணப்பாகு. இந்த செம்பருத்திமணப்பாகு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் என்றாலும் இதை வீட்டிலேயேயும் மிக சுத்தமான முறைகளில் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:
எலுமிச்சம்பழம் – 25 பழம்செம்பருத்தி பூ – 100சுத்தமான நாட்டு வெல்லம்சுத்தமான தேன்

செய்முறை: முதலில் நன்றாக பழுத்த ஃப்ரெஷ் பழத்திலிருந்து எலுமிச்சை சாறை எடுக்க வேண்டும். செம்பருத்தி பூக்கள் சுத்தம் செய்து இதழ்களை தனியாக எடுத்து வைக்கவும்.

எலுமிச்சை சாறை வடிகட்டி அதில் செம்பருத்தி பூக்களின் இதழ்களை சேர்த்து நாள் முழுக்க ஊறவிடவும். அவ்வபோது அதை கிளறி கிளறி எடுக்கவும். நன்றாக ஊறியதும் கரண்டி அல்லது மத்து கொண்டு மசித்தால் இதழ்கள் சாறோடு கலந்து நன்றாக மசித்துவிடும்.

பிறகு சுத்தமான நாட்டு வெல்லம் அல்லது சுத்தமான தேன் கலந்து அனைத்தையும் நன்றாக சேர்த்து அடுப்பை மிதமானத் தீயில் வைத்து இதை சூடேற்றவும். கைவிடாமல் கிளறிக்கொண்டே இருந்தால் மணப்பாகு தயாராகிவிடும் . அப்போது அதை இறக்கி அடுப்பை அணைத்து ஆறவிடவும்.

செம்பருத்தி மணப்பாகு ஆறியதும் அதை சுத்தமான கண்ணாடி பாட்டிலில் வைத்து கொண்டு பயன்படுத்தலாம். கை படாமல் இருந்தால் ஆறுமாதங்கள் வரை இவை கெடாமல் இருக்கும். இதை அனைவரும் சாப்பிடலாம். காலையில் ஒரு தேக்கரண்டி, இரவு படுக்கைக்குமுன்பு ஒரு டீஸ்பூனும் சாப்பிட்டு வரலாம். இதய நோய் பிரச்சனை இருப்பவர்களுக்கு ஏற்ற மருந்து இது.