புரதச்சத்து நிறைந்த முளைக்கட்டிய பயறு வகைகள்

சென்னை: முளைக்க வைக்கப்பட்டு பயன்படுத்தும் அனைத்து பயறு வகைகளுமே சிறந்த புரதச்சத்து உடையது. அதில் புரதம், கார்போஹைட்ரேட், பீட்டா, கரோட்டின் போன்றவை அதிக அளவில் உள்ளன. முளை கட்டிய தானியங்களில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டும், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.

அதிலும் காலையில் வெறும் வயிற்றில் முளைகட்டிய பயறு சாப்பிடுவதனால் உடலுக்கு பல நன்மைகள் தருகின்றது. அந்தவகையில் தானியங்களை எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று தெரிந்து கொள்வோம்.

முளைக்கட்டிய தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். ஆரோக்கியமான சருமத்தை பெற விரும்புவோர் முளைகட்டிய தானியங்களை எடுத்துக் கொள்ளலாம்.

முளைகட்டிய தானியங்களை நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் போது, உங்களின் ஜீரண சக்திக்கு உதவி புரியும். இதில் உள்ள நார்ச்சத்து மலத்தை இலகுவாக்கி குடல் வழியாக விரைவில் நகர்த்த உதவும். இதனால் மலச்சிக்கல் அபாயத்தைக் குறைக்க முடியும். இது குடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

முளைகட்டிய பயிர்கள் அல்லது தானியங்களை உண்ட பின் நீங்கள் மந்தமாகவோ அல்லது அஜீரணமாகவோ உணர்ந்தால், நன்றாக நீராவியில் வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் சிறிதளவு நெய்யை முளைகட்டிய பயிருடன் சேர்த்துக் கொள்ளலாம்.