எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் இரவு உணவுமுறைதான்

சென்னை: இரவு உணவே காரணம்... பெரும்பாலானோரின் எடை அதிகரிப்பதற்கும், நோய்கள் வருவதற்கும் முக்கியக் காரணமே இரவு உணவுமுறைதான். இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்று பார்ப்போம்.

இரவில் சாக்லேட் உட்கொள்வது பதற்றத்தை ஏற்படுத்தி தூக்கத்தை கெடுத்துவிடும். இரவு உணவில் இனிப்பு சேர்ப்பது உடலில் இன்சுலின் எதிர்ப்பை உருவாக்குகிறது. இது எடை அதிகரிப்பு மற்றும் வீக்கத்திற்கு வழிவகுக்கும்.

இரவு ஒன்பது மணிக்கு மேல் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். பாலில் அதிக அளவு புரோட்டின், கால்சியம் உள்ளது. இவை உடலுக்கு முக்கியமானவைதான். ஆனால், பாலில் உள்ள லாக்டோஸ் செரிக்கத் தாமதமாகும். இரவில் பால் அருந்துவதால், செரிமானப் பிரச்னைகள் ஏற்படும். சீரான தூக்கம் பாதிக்கப்படும்.

நூடூல்ஸ், மேகி போன்ற துரித உணவுகளை கண்டிப்பாக இரவில் எடுத்துக் கொள்ள வேண்டாம். இவை வயிறை உப்பச் செய்து விடும். அசைவ உணவுகள், பொரித்த உணவுகள், மசாலா உணவுகள், ஜங்க் ஃபுட், கூல் டிரிங்ஸ் இவற்றை இரவில் தவிர்க்கவேண்டும். மசாலா உணவுகள் அசிடிட்டியை ஏற்படுத்தும். அசைவம், பரோட்டா உணவுகள் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

தர்பூசணி, வெள்ளரி போன்ற அதிக நீர் நிறைந்த உணவுகளை இரவில் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். தூங்க செல்வதற்கு முன் இந்த உணவுகளை சாப்பிடுவதன் காரணமாக, சிறுநீர்பை நிறைந்து அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டுகிறது. இதன் காரணமாக தூக்க பிரச்சனை ஏற்படுகிறது.