புளிப்பொங்கல் செய்து பாருங்கள்... அசந்து போய்விடுவீர்கள்

சென்னை: இட்லி, தோசை என்று செய்து சலித்து போய் விட்டதா. மாறுதலுக்கு புளிப் பொங்கல் செய்து பாருங்கள். ருசியில் அசந்து போய் விடுவீர்கள்.

தேவையானவை: பச்சரிசி - 200 கிராம், புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு, காய்ந்த மிளகாய் - 2, கடுகு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசியை உப்புமா ரவை பதத்துக்கு மிக்ஸியில் உடைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, கிள்ளிய மிளகாய் தாளித்து, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும். இதனுடன் அரிசி ரவையை சேர்க்கவும்.

புளிக் கரைசலும், தண்ணீரும் சேர்த்து ரவையின் அளவுக்கு நான்கு பங்கு என்ற விகிதத்தில் எடுத்து, ஊற்றிக் கிளறி, குக்கரை மூடி, மூன்று விசில் வந்ததும் இறக்கவும். இதற்கு பொரித்த அப்பளம், வடகம் சிறந்த காம்பினேஷன்.