உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் தண்ணீர்

சென்னை: நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு சரியான விகிதத்தில் தண்ணீர் அருந்த வேண்டும். இல்லை என்றால் தேவையற்ற உடல் நல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். எனவே தான் சராசரியாக ஒரு மனிதன் நாள் ஒன்று 2 லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருந்தால் தான் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கும். ஆனால் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னதாக தண்ணீர் குடிக்க வேண்டுமா? இல்லை தவிர்க்கலாமா? என்ற சந்தேகம் அதிகளவில் நம்மில் பலருக்கு எழக்கூடும்.


இரவு தூங்க செல்வதற்கு முன்னதாக தண்ணீர் குடித்தால் நடுஇரவில் கழிப்பறைக்குச் செல்ல நேரிடும் என்பதால் பலர் இதனைத் தவிர்ப்பார்கள். தண்ணீர் குடிப்பதால் நீர் அழுத்தம் மற்றும் தூக்கம் கெடுதல் போன்ற பிரச்சனைகள் மட்டும் தான் ஏற்படுமே தவிர வேறு எந்தவிதமான உடல் நல பிரச்சனைகளும் ஏற்படாது.

எனவே நாம் எவ்வித அச்சமும் இன்றி தூங்க செல்வதற்கு முன்னதாக தண்ணீர் தாராளமாக அருந்தலாம். அதிலும் வெதுவெதுப்பாக நீரை இரவு குடித்துவிட்டு தூங்கும் போது, இரவு முழுவதும் உங்களை நீரேற்றமாக வைத்திருக்கிறது.


இதோடு வயிற்று வலி அல்லது உடல் பிடிப்புகளை எளிதாக்குவதற்கும் உதவுகிறது. மேலும் வெதுவெதுப்பான நீர் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் உடலில் கழிவுகளை அகற்றுவதை எளிதாக்குகிறது. வியர்வையும் அதிகளவில் வெளியேற்றுகிறது.

இரவு தண்ணீர் குடிக்கும் போது நாள் முழுவதும் இருந்த உடல் அலுப்பு மற்றும் மன அழுத்தம் குறையும் என்கின்றனர் மருத்துவர்கள். தூங்கச்செல்வதற்கு முன்னதாக தண்ணீர் அருந்தும் போது உடலில் புதிய தசைகளை உருவாக்குவதோடு, தசைகளை வலுவாக்கும். உடலை வெப்பநிலைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் இதய அழுத்தத்தைக் குறைக்கிறது.