திருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு உடல் பருமன் பிரச்சினை ஏற்பட காரணம் என்ன ?

திருமணத்திற்கு பிறகு ஆண்-பெண் இருபாலருக்கும் உடல் எடை அதிகரிப்பது பொதுவானதாக இருந்தாலும், பெண்கள்தான் உடல் பருமன் சார்ந்த பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்கிறார்கள். புதுமண தம்பதியர் தங்கள் புதிய வாழ்க்கையின் ஆரம்ப காலத்தை அனுபவிக்க விரும்புவார்கள். பெரும்பாலான வீடுகளில் திருமணமான புதிதில் புதுப்பெண்ணை வீட்டு வேலைகள் செய்வதற்கு அனுமதிக்கமாட்டார்கள். வெளி இடங்களில் சாப்பிடுவது, உறவினர் வீட்டு விருந்துகளில் கலந்து கொள்வது என பிசியாக இருப்பார்கள்.

அந்த சமயங்களில் பெரும்பாலான புதுமண தம்பதியர் சாப்பிடும் விஷயத்தை பற்றி கவலைப்படுவதில்லை. அதாவது உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதில்லை. திருமணமான புதிதில் தங்கள் வாழ்நாளில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டிருப்பார்கள். ஆரம்ப நாட்களில் மகிழ்ச்சிதான் பிரதான அங்கம் வகிக்கும். அப்போது தங்களுக்கு பிடித்தமான உணவு பதார்த்தங்களை விரும்பி ருசித்துக்கொண்டே உரையாடலை தொடர்வார்கள். கணவர் மற்றும் குடும்பத்தினரை ஈர்ப்பதற்கு புதிய சமையல் குறிப்புகளையும் கையாளுவார். அதுவும் உடல் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.

திருமணமான புதிதில் நிம்மதியான வாழ்க்கை சூழலை அனுபவிப்பார்கள். திருமணத்திற்கு முன்பு எதிர்கொண்ட பிரச்சினைகள், மன வருத்தங்கள், துயரங்களுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்துவிடுவார்கள். ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்பார்கள். அதிக நேரம் ஓய்வும் எடுப்பார்கள். அதுவும் திருமணத்திற்கு பிறகு எடை அதிகரிப்பதற்கு மற்றொரு பொதுவான காரணமாகும். திருமணத்திற்கு பிறகு வீட்டில்தான் அதிக நேரம் செலவிடுவார்கள். மலைவாசஸ்தலங்களுக்கு சென்று அங்கு நேரத்தை செலவிட விரும்புவார்கள். தேனிலவு காலம் உடல் பருமன் பிரச்சினைக்கு அடித்தளம் அமைத்துவிடக்கூடியது.

திருமணமான உடனேயே தம்பதியர் குழந்தை பெற திட்டமிட்டால், பெண்ணின் உடல் எடை அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. கர்ப்ப காலத்தில் காரமான, எண்ணெய்யில் தயாரான உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதற்கு விரும்புவார்கள். அத்துடன் உணவு கட்டுப்பாட்டை கவனத்தில் கொள்ளாமல் விதவிதமான உணவுகளையும் சாப்பிடுவார்கள். அதுவும் உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாகிவிடும்.