பச்சிளம் குழந்தைகள் இடதுபுற தோளில் அரவணைக்க ஆசைப்படுவது ஏன் ?

பெரும்பாலும் பச்சிளம் குழந்தைகளை தூக்கி கொஞ்சுபவர்கள் இடதுபுற தோளில்தான் அரவணைப்பார்கள். தாயும் குழந்தையை இடது புற தோள்பட்டையில்தான் வைத்திருப்பார். அவர்கள் பெரும்பாலும் வலது கை பழக்கம் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். குழந்தைகளும் இடது புற தோள்பட்டையில் அரவணைப்பதைத்தான் விரும்பும். குழந்தையை தூக்குவதற்கு வலது கையை பயன்படுத்தினாலும் வலது தோள்பட்டையில் அரவணைப்பதில்லை.

1960-ம் ஆண்டிலேயே ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து ஆய்வு நடத்தினர். 40 பேரை இந்த ஆய்வுக்கு உட்படுத்தியதில் 72 சதவீதம் பேர் இடது தோள்பட்டையில்தான் குழந்தைகளை வைத்திருந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் வலது கை பழக்கம் கொண்டவர்கள். அவர்களுடைய மூளையின் செயல்பாடுகளை ஆராய்ந்ததில் அது உணர்வு ரீதியான பந்தத்தை வெளிப்படுத்துவது கண்டறியப்பட்டது.

கர்ப்ப காலத்திலேயே பாதுகாப்பான மற்றும் உணர்வு ரீதியான தொடர்பை தாய்க்கும், சேய்க்கும் இடையே ஏற்படும். அதாவது இதயம் உடலின் இடது பகுதியில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் தாயின் இதயத் துடிப்பு தெரியும். அந்த துடிப்புடன் நெருக்கமாக இருக்க விரும்பும். குழந்தை அழும்போது தாய் தூக்கி இடது பக்கத்தில் வைக்கும்போது சில நிமிடங்களில் அமைதியாகி விடும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த ஆய்வில், குழந்தையை இடது தோள்பட்டையில் சிறிது நேரம் வைத்திருந்தால் தூங்கியும் விடும். தாயின் அரவணைப்பில் இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ளும். தாயின் உணர்வுகளையும், சமிக்ஞைகளையும் புரிந்து கொள்ளும். அதுவே குழந்தையின் மொழி சமிக்ஞைக்கும் அடித்தளம் அமைத்து கொடுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.